தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குண்டும் குழியுமான சாலை
தக்கலை-மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டாத்துறை மற்றும் சுவாமியார் மடம் பகுதியில் குண்டும், குழியுமாக சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் அதிக அளவு சிக்குகிறார்கள். எனவே அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகிறார்கள்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சீரமைக்க வேண்டிய சாலை
நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி எப்போதும் இருக்கும். அதிலும் கேப் ரோட்டில் எந்த நேரமும் வாகனங்களாக இருக்கும். அந்த அளவு போக்குவரத்து நெருக்கடி உள்ள கேப் ரோட்டில் அண்ணா பஸ் நிலைய சுரங்கப்பாதை அருகே உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மழை பெய்து சாலையில் தண்ணீர் இருந்தால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையன்பன், ஆரல்வாய்மொழி.
தபால் பெட்டி அமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட என்.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியில் தபால் பெட்டி இல்லை. இந்த பகுதி கோட்டார் தபால் நிலையத்துக்கு உட்பட்டதாகும். இங்கு வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளும் உள்ளன. அவற்றில் இருந்து ஏராளமான தபால்கள் பலருக்கும் அடிக்கடி அனுப்பப்படும். எனவே இந்த பகுதி மக்களும் பயனடையும் வகையில் இங்கு ஒரு தபால் பெட்டியை அமைக்க அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, குஞ்சன்விளை.
காத்திருக்கும் ஆபத்து
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவசுப்பிரமணியபுரம் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அதன் நடுப்பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சேதம் அடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
ரஞ்சித்சிங், சிவசுப்பிரமணியபுரம்.
சாலையின் அவலம்
மருங்கூரில் இருந்து அமராவதிவிளைக்கு தடம் எண் 34 ஏ பஸ் இயக்கப்படுகிறது. மருங்கூர் ஆற்று பாலத்தில் இருந்து அமராவதிவிளைக்கு செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் சாலை குறுகியது. ஒரு பஸ் மட்டுமே செல்லும் வசதி உள்ளது. சாலையின் இரு பகுதியிலும் வீடுகள் உள்ளன. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரி சீரமைக்க வேண்டும்.
-அனந்த நாராயணன், மருங்கூர்.
Related Tags :
Next Story