15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Nov 2021 1:54 AM IST (Updated: 16 Nov 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி டெம்போவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் கடத்திய அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

களியக்காவிளை, 
கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி டெம்போவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் கடத்திய அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
 வாகன சோதனை
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் குழித்துறை சந்திப்பில் நேற்று மாவட்ட பறக்கும்படை தாசில்தார் அப்துல் மன்னான் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை அவர்கள் சைகை காட்டி நிறுத்த முயன்றனர். உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். 
15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வருவாய்த்துறை அதிகாரிகள் டெம்போவில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது. அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. 
அதைத்தொடர்ந்து 15 டன் ரேஷன் அரிசியை, டெம்போவுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புகாடு அரிசி குடோனில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலி நம்பர் பிளேட் கார் சிக்கியது
இதே போல் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் ராஜ்குமார், சிம்சன் மற்றும் சுபாஷ் ஆகியோர் ராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் புத்தன் வீடு சதுரங்க விளாகம் பகுதியை சேர்ந்த பிஜு (வயது 30) என்பதும், அவர் கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரில் தமிழக பதிவு எண் கொண்ட போலி நம்பர் பிளேட்டை மாட்டி ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து டிரைவர் பிஜுவை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் அரிசி குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story