மழைக்கு 452 வீடுகள் சேதம்


மழைக்கு 452 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 16 Nov 2021 1:58 AM IST (Updated: 16 Nov 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த தொடர் மழைக்கு 452 வீடுகள் சேதமடைந்தன. மின்வாரியத்துக்கு ரூ.67 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த தொடர் மழைக்கு 452 வீடுகள் சேதமடைந்தன. மின்வாரியத்துக்கு ரூ.67 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை
குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளில் இருந்து அதிகமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளமாக சென்றது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறியது.
மேலும் பல இடங்களில் குளங்கள் உடைப்பு, கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். 4 நாட்களுக்கு பிறகு வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியுள்ளது.
145 வீடுகள் இடிந்தன
தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 145 வீடுகள் இடிந்தன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 51 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 7 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 18 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 53 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 8 வீடுகளும் ஆகும். 
அதே சமயத்தில் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 452 வீடுகள் இடிந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மின்கம்பங்களை சீரமைக்கும் பணி
கடந்த 11-ந் தேதி முதல் பெய்த மழைக்கு மாவட்டம் முழுவதும் 67 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 8 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தக்கலை, குழித்துறை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் 17 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்ததால், மொத்தம் 446 மின்மாற்றிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியதால், 258 மின்மாற்றிகள் செயல்பட தொடங்கியது. 
தற்போது வெள்ளம் வடியாத பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளின் செயல்பாடுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.67 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடு இடிந்தது
குளச்சல் அருகே கொத்தனார்விளையில் நேற்று அதிகாலையில் மழையால் தங்கத்துரை (வயது 80) என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் அவரது மனைவி சொர்ணம், மகன் குமார் (35), மருமகள் சுனிதா (30) மற்றும் 2 குழந்தைகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். வீடு இடியும் போது சத்தம் கேட்டு அனைவரும் வெளியே ஓடினர். இதனால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்பட அனைத்து பொருட்களும் நாசமாயின.

Next Story