கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை கொன்று ரூ.2½ லட்சம் கொள்ளை


கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை கொன்று ரூ.2½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 16 Nov 2021 2:11 AM IST (Updated: 16 Nov 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்ததுடன், காவலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மா்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: துமகூருவில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்ததுடன், காவலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மா்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

காவலாளி கொலை

துமகூரு மாவட்டம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 55). இவர், துமகூரு புறநகரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், கூட்டுறவு சங்கத்தில் புகுந்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தப்பா, மர்மநபர்களை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த மர்மநபர்கள் சித்தப்பாவை கண்மூடித்தனமாக அடித்ததாக தெரிகிறது. பின்னர் துணியால் சித்தப்பாவின் கழுத்தை இறுக்கி மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, கூட்டுறவு சங்கத்தின் பின்பக்கத்தில் சித்தப்பாவின் உடலை மர்மநபர்கள் வீசினார்கள்.

ரூ.2½ லட்சம் கொள்ளை

பின்னர் கூட்டுறவு சங்கத்தின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த லாக்கரை கியாஸ் கட்டர் மூலமாக உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். நேற்று காலையில் வேலைக்கு வந்த ஊழியர்கள், சித்தப்பா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் துமகூரு புறநகர் போலீசார் விரைந்து வந்து சித்தப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது கூட்டுறவு சங்கத்தில் கொள்ளையை தடுத்ததால் மர்மநபர்கள் சித்தப்பாவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கூட்டுறவு சங்கத்தில் இருந்த ரூ.2½ லட்சம் மற்றும் ஆவணங்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Next Story