முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய கலெக்டர் கார்மேகம்


முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய கலெக்டர் கார்மேகம்
x
தினத்தந்தி 16 Nov 2021 3:35 AM IST (Updated: 16 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரத்தை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு  ரூ.50 ஆயிரத்தை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
விழிப்புணர்வு
உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில்சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
உலக சர்க்கரை நோய் தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சர்க்கரை நோயானது உடலில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது மற்றும் செல்லுக்குள் குளுக்கோஸ் செல்ல இன்சுலின் உதவாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. முதல் வகை சர்க்கரை நோயாளிகள் தொடர்ச்சியாக இன்சுலினும், இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும்.
1 லட்சம் புற நோயாளிகள்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகமானால் மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுமே தவிர இன்சுலின் செலுத்தி கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சர்க்கரை நோய் துறையின் மூலமாக ஆண்டுக்கு 1 லட்சம் புற நோயாளிகளும், 50 ஆயிரம் உள் நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்தப்படியாக சர்க்கரை நோய்க்கு அனைத்து சேவைகளும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகி வரும் நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே இடத்தில் அனைத்து விதமான முழு உடல் பரிசோதனைகளும் ரூ.250-க்கு செய்யப்படுகிறது.
ரூ.50 ஆயிரம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு தேவையான கருவிகள் வாங்குவதற்கு அரசால் தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எனது ஊதியத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நன்கொடையாக வழங்குகிறேன்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால் மற்றும் சர்க்கரை நோய் துறை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story