‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Nov 2021 3:35 AM IST (Updated: 16 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆழ்துளை கிணறு சீரமைக்கப்பட்டது

சேலம் 4 ரோடு நாராயணபிள்ளை தெரு காமராஜர் காலனி பின்புற பகுதியில் உள்ள குடியிருப்பில் மின்மோட்டார் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு பழுதடைந்து காணப்பட்டது. கடந்த 13-ந் தேதி இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறை சீரமைத்து குடிநீர் கிடைக்கும் வகையில் சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்காக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ஊர்பொதுமக்கள், நாராயணபிள்ளை தெரு, சேலம்.
====

குவிந்து கிடக்கும் குப்பைகள்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் ஆவடத்தூர் கிராம பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் அங்கு குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ஆவடத்தூர், சேலம்.
====
ஆபத்தான கிணறு 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சுக்கம்பட்டி ஊராட்சியில் காந்திநகர் காலனி 8-வது வார்டு பகுதியில் பொதுகிணறு ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்றை சுற்றி சுற்றுசுவர் கட்ட வேண்டும் என்று பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடும் போது கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தான கிணற்றின் சுற்று சுவரை கட்டித்தர வேண்டும்.
-செ.சுரேஷ்., சுக்கம்பட்டி, சேலம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மின்னக்கல் பஞ்சாயத்து வாய்க்கால் பட்டறை காலனியில் ஊர் பொதுகிணறு மூடப்படாமல் திறந்த வெளியாக  உள்ளது. இந்த கிணற்றை எட்டி பார்த்தும் கிணற்றை சுற்றிக்கொண்டும் குழந்தைகள் விளையாடுகிறார்கள். திறந்த வெளியாக ஊர் பொதுகிணறு இருப்பதால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து அதிகம் உள்ளது. எனவே அந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலை பொருத்த வேண்டும்.
-சீ.தமிழ்செல்வன், வாய்க்கால் பட்டறை, நாமக்கல்.
===
தரமில்லாத தார்சாலை

சேலம் மாவட்டம் மல்லூர் தபால் நிலையம் அருகில் இருந்து செக்கார தெரு வரை உள்ள சாலை அமைக்கப்பட்ட 2 நாட்களில் 4 இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலையில் அடிக்கடி சிறு சிறு விபத்துக்களில் சிக்குகின்றனர். நடந்து செல்வோருக்கு கடும் சிரமமாக உள்ளது. எனவே 15 ஆண்களுக்கு பின்பு போடப்பட்ட இந்த சாலையும் இப்படி தரமற்றதாக போடப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், மல்லூர், சேலம்.
====
அறிவிப்பு பலகை இல்லாத பிரிவு சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் மூக்காகவுண்டனூர் பிரிவு சாலை தொடங்குகிறது. இந்த சாலையானது மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு முதல் புதுச்சேரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பு சாலை யாகவும் உள்ளது. இதனால் மூக்காகவுண்டனூர் ரோட்டின் வழியாக நாள்தோறும் ஏராளமான இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால் மத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் செல்லும் வாகனங்களுடன் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த பிரிவு சாலை சந்திப்பில் ஒளிரும் அறிவிப்பு பலகை ஒன்று வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
===
சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கொல்லப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீரும், சாக்கடை நீரும் அந்த பகுதியில் தேங்கி  கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதி அமைத்து, சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-விக்னேஷ், வேப்பனப்பள்ளி.
===
புதர்கள் அகற்றப்படுமா? 

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிப்பாளையம் வார்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே புதர்கள் அதிக அளவில் வளர்ந்து கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சம் அங்கன்வாடி குழந்தைகள் இடையே உள்ளது. எனவே இந்த பகுதியில் வளர்ந்து கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மல்லிப்பாளையம், சேலம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து சேலம் கேம்ப் செல்லும் மலைப்பாதையில் செடி, கொடிகளும், முட்புதர்களும் வளர்ந்து கிடக்கிறது. எனவே சாலையில் வாகனத்தில் செல்வோருக்கு இந்த செடி கொடிகளால் இடையூறாக உள்ளது. ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன்பு முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.ஜேம்ஸ்ராஜன், கொளத்தூர், சேலம்.

Next Story