மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு-அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்கிறார்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்கிறார்.
மேட்டூர் அணை நிரம்பியது
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 13-ந் தேதி இரவு 11.35 மணி அளவில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவும், அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாகவும் திறந்து விடப்பட்டு வருகிறது.
2-வது நாளாக...
இதன்படி நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 150 கனஅடியும் வெளியேற்றப்பட்டது. இதன்படி நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரத்து 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது.
கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் இந்த 2 மின் நிலையங்களில் சேர்த்து 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, பவானி உள்பட 7 இடங்களில் உள்ள கதவணை மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
தற்போது கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கதவணை மின் நிலையங்கள் மூலம் நடைபெறும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
மேட்டூர் அணை 2 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். தொடர்ந்து காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டத்துக்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு சென்று அங்கும் ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story