அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தர்ணா விஷபாட்டில் கத்தியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
அரசு வேலை வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஷ பாட்டில் மற்றும் கத்தியை காட்டி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
அரசு வேலை வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஷ பாட்டில் மற்றும் கத்தியை காட்டி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை மிரட்டல்
தர்மபுரி மாவட்டம் பாலவாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி முத்துலட்சுமி. மாற்றுத்திறனாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி கையில் மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலை காட்டினர். மேலும் கழுத்தை அறுத்து கொள்வோம் என கத்தியை காட்டி அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
பறிமுதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியிடம் இருந்த விஷபாட்டில் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த மாற்றுத்திறனாளி தம்பதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு பசுமை வீடு, மானியத்துடன் வங்கி கடன் உதவி, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏற்கனவே அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வேலை வழங்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story