நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு அருவியில் குளிக்க பரிசல் இயக்க தடை


நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு அருவியில் குளிக்க பரிசல் இயக்க தடை
x
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பரிசல் இயக்க தடை
மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோர பகுதிகளில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. 
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதலைப்பண்ணை, மணல் திட்டு, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நுழைவுவாயில் பூட்டப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Next Story