ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை மனு


ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 16 Nov 2021 9:25 AM IST (Updated: 16 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் தேர்வு நடத்தவேண்டும் என்று திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

ஆன்லைனில் தேர்வு நடத்தவேண்டும் என்று திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டியும், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 237 மனுக்கள் பெறப்பட்டது. 

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதுகு தண்டுவடம் பாதிப்படைந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு 13 வகையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

ஆன்லைன் மூலம் தேர்வு

திருப்பத்தூர் அருகே உள்ள அரசு கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தது. இந்த சூழ்நிலையில் அரசு நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என கூறியிருந்தனர். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை கலெக்டர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story