செல்போன், பணத்தை பறிக்கவிடாமல் வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய வாலிபர் அடித்துக்கொலை
செல்போன், பணத்தை பறிக்கவிடாமல் போராடிய வாலிபரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பலியானார்.
திரு.வி.க. நகர்,
சென்னை கொளத்தூர் கம்பர் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 21). இவர், கடந்த 4-ந் தேதி இரவு திருமங்கலம் பகுதியில் தனது நண்பர் ஹரி கிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் இவர்களை வழிமறித்தனர். பின்னர் மகேசிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். உடனே மகேஷ், செல்போன், பணத்தை பறிக்க விடாமல் வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரும் சேர்ந்து மகேசை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த மகேசை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சமபவம் தொடர்பாக திருமங்கலம் பகுதியை சேர்ந்த காமேஷ் (19) மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story