கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கழிவுநீருடன் கலந்த மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் வண்ணாரப்பேட்டையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெரம்பூர்,
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை ஓய்ந்த பிறகும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா, ராமதாஸ் நகர், லேபர் லைன் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அந்த பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், நேற்று வண்ணாரப்பேட்டை தங்கசாலை மணிக்கூண்டு மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் சாலையின் இருபுறமும் மறியலில் ஈடுபட்டனர். பெண்கள், ஆண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் சாலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டி, வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் எம்.எல்.ஏ. வந்து பேச வேண்டும் என கூறியதால் ராயபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் ராமதாஸ் நகர், காத்பாடா, லேபர் லைன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி நிற்பதை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மூர்த்தி, மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த பகுதியில் தேங்கி நின்ற மழைநீர், டேங்கர் லாரி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story