கிருஷ்ணாபுரம் அணை நீர் 11-வது முறையாக திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கிருஷ்ணாபுரம் அணை நீர் 11-வது முறையாக திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2021 7:45 PM IST (Updated: 16 Nov 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணாபுரம் அணை நீர் 11-வது முறையாக திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணாபுரம் அணை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முடிவு செய்து தமிழக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா அவர்களின் ஆலோசனையின் பேரில், வருவாய் துறையினர் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் ஆற்றில் உள்ள தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்தனர்.

கலெக்டர் எச்சரிக்கை

மேலும் இந்த ஆற்றில் உள்ள தரைப்பாலங்களின் இருபுறமும் வருவாய் துறையினரும், போலீசாரும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காமல் இரவு முழுவதும் கண்காணித்தனர். கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது இது 11-வது முறையாகும்.

இந்த தண்ணீர் நகரி ஆறு வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு பூண்டி நீர்தேக்கம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நகரி ஆற்றில் பள்ளிப்பட்டு பாலத்தில் இருந்து பூண்டி நீர்தேக்கம் வரை கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story