கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்துள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்


கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்துள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:17 PM IST (Updated: 16 Nov 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வேதாரண்யம்:
கோடியக்கரை சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோடியக்கரை சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். 
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமான அளவு மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும், பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதாலும் கோடியக்கரை  சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்து  குவிந்துள்ளன. 
லட்சக்கணக்கான பறவைகள் குவிந்தன
மேலும் ரஷ்யாவில் இருந்து கூழைக்கிடா, இலங்கையில் இருந்து பூநாரை, இமயமலை பகுதியில் இருந்து செங்கால் நாரை மற்றும் கரண்டி மூக்குநாரை. சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், அண்டார்டிகாவில் இருந்து கடற்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் கோடியக்கரை சரணாலயத்துக்கு வந்து குவிந்துள்ளன.
சரணாலயத்தில் உள்ள குளங்களில் பறவைகள் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரை தேடும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர். இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம். 
உணவகம் திறப்பு
தஞ்சாவூர் வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பறவைகளை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம், வழிகாட்டி, பைனாகுலர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ன. 
இன்று(புதன்கிழமை) முதல் வன சூழல் மேம்பாட்டு குழுவின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் சார்பில் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவு வழங்க வன உணவகம் திறக்கப்படுகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Next Story