ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Nov 2021 9:38 PM IST (Updated: 16 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
டிரைவர் பலி 
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள செங்கட்டாம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 36). லாரி டிரைவர். இவர் கடந்த 3.11.2014 அன்று செங்கட்டாம்பட்டி பிரிவு அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மனைவி மலர் மற்றும் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் வக்கீல் ஜெயராமன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அழகர்சாமியின் குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.12 லட்சத்து 52 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
பஸ் ஜப்தி 
ஆனால் இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக கூறி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் இழப்பீடு தொகை குறைவாக இருப்பதாக அழகர்சாமியின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, இழப்பீடாக ரூ.17 லட்சத்து 12 ஆயிரத்து 800-ஐ வழங்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
எனினும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சரவணன், அழகர்சாமியின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சத்து 42 ஆயிரத்து 927 வழங்கும்படி தீர்ப்பளித்தார்.
அதன்பின்னரும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து பொள்ளாச்சி செல்வதற்காக திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Next Story