ஆடுதுறை54 என்ற புதிய சம்பா நெல் ரகம்


ஆடுதுறை54 என்ற புதிய சம்பா நெல் ரகம்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:48 PM IST (Updated: 16 Nov 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை54 என்ற புதிய சம்பா நெல் ரகம்

பொங்கலூர்,
பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் உடுமலையில் ஆடுதுறை-54 என்ற புதிய சம்பா நெல் ரகம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய நெல்ரகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் புதிய சம்பா நெல் ரகமான ஆடுதுறை54 என்ற புதிய நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் அறிமுக நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள பெருமாள் புதூரில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப்பேராசிரியர் கதிரவன் கலந்துகொண்டு புதிய நெல் ரகம் குறித்து பேசியதாவது:
 அதிக மகசூல் தரக்கூடிய ஆடுதுறை54 நெல் ரகம் 130 லிருந்து 135 நாட்கள் வயதுடையது. எக்டருக்கு சராசரியாக 6 ஆயிரத்து 300 கிலோ மகசூல் கிடைக்க கூடியது. இந்த புதிய நெல் ரகம் மடக்கு புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்டது. குலைநோய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. ஏக்கருக்கு 16 கிலோ விதை போதுமானது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்தால் தலை மற்றும் மணிச்சத்து அதிக அளவில் கிடைக்கும். விதை முளைத்து 5 தினங்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு பென்டிமெத்தலின் ஒரு கிலோ, பிரிடி வாக்குளோர் மற்றும் சோபிட் 450 கிராம் தெளித்து கலையை கட்டுப்படுத்தலாம். 30 முதல் 35 நாட்களுக்குள் கைக்களை எடுக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி 4 கிராம், பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களை தடுக்கலாம். 
இவ்வாறு அவர் பேசினார். 
 நெல்விதைக்கும் கருவி
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் நெல் விதைக்கும் கருவி அறிமுகம் மற்றும் செயல் விளக்கம் செய்யப்பட்டது. நன்செய் நிலங்களில் நேரடியாக ஒரே சீராக வரிசையில் நெல் விதைப்பதற்கு இந்த கருவி மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும், நாளொன்றுக்கு 11 ஏக்கர் வரை இந்த கருவி மூலம் விதைப்பு செய்ய முடியும் என்றும், இதன் விலை ரூ.6000 என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஆட்களைக் கொண்டு இயக்கக்கூடிய இந்த கருவியின் மூலம் பெருமளவிலான ஆட்கள் செலவை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநர் திலகம், பேராசிரியை கவிதா ஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story