நிலக்கோட்டை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்


நிலக்கோட்டை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்
x
தினத்தந்தி 16 Nov 2021 10:13 PM IST (Updated: 16 Nov 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே எத்திலோடு கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம், பிள்ளையார் நத்தம், எத்திலோடு, ஏ.ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் அடுத்தடுத்து உள்ளன. ஒரு கண்மாய் நிறைந்ததும், அடுத்த கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது. மேலும் இந்த கண்மாய்களுக்கு மஞ்சளாறு அணை, மருதாநதி, வைகை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வரத்து ஏற்படும். 
இதில், சித்தர்கள் நத்தம், பிள்ளையார் நத்தம் கண்மாய் நிரம்பியதும், எத்திலோடு, ஏ.ஆவாரம்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். ஆனால் போதிய மழை பெய்யாததால் எத்திலோடு, ஏ.ஆவாரம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அந்த கண்மாய்கள் வறண்டு காணப்பட்டன. இதற்கிடையே எத்திலோடு, ஏ.ஆவாரம்பட்டி கண்மாய்களுக்கு நீர்வரத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி, நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெய்த பலத்த மழையால் எத்திலோடு கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த கண்மாய் நிரம்பியது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இதையடுத்து எத்திலோடு கண்மாய் மடையில் இருந்து ஏ.ஆவாரம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர், விவசாயிகளுடன் சேர்ந்து கண்மாய்க்கும் செல்லும் தண்ணீரில் மலர்தூவி தூவினார். 
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கதிரேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு என்ற சின்ன மாயன், ரோஸ் நெடுமாறன், தியாகு, ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story