தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஏ.டி.எம். மையத்தில் தெருநாய்கள் தொல்லை
சேலம் சூரமங்கலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்தநிலையில் ஏ.டி.எம். மையங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அதாவது தெரு நாய்கள் ஏ.டி.எம். மையங்களுக்குள் புகுந்து தூங்குகின்றன. இதனால் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் திணறி வருகிறார்கள். சில நேரங்களில் ரெயில் பயணிகளை இந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே ஏ.டி.எம். மையங்கள் மட்டும் அல்லாமல் ரெயில் நிலையங்களில் தெருநாய்கள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடராஜ், சூரமங்கலம், சேலம்.
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை முதல் ஓசூர் செல்லும் நா.கொண்டபள்ளி ஏரிக்கரை மேல் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலம் என்பதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சாலையில் பயணிக்கின்றனர். அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கிருஷ்ணகிரி.
சேறும், சகதியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரமான பள்ளி, கொங்கனப்பள்ளி, கே.கொத்தூர், தோட்டகணவாய் ஆகிய கிராமங்களில் மழைக்காலங்களில் ஊர் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் தெருக்களில் மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிராமங்களில் சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம் பாஸ்கர் தாஸ் நகர், முனீஸ்வரர் நகர், சபரி நகர் உட்பட 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மண் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வழுக்கி விழுகின்றனர். மார்க்கெட்டுக்கு வரும் கனரக வாகனங்கள் இந்த சாலையை உபயோகிப்பதால் மண்சாலை படுமோசமாக உள்ளது. இதுபற்றி பல முறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்பொதுமக்கள், பத்தலப்பள்ளி, கிருஷ்ணகிரி.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை ஏரியின் உள்ளே கொண்டு சென்று தான் அடக்கம் செய்கின்றனர். தற்போது மழைக்காலங்காலம் என்பதால் மண் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நரிப்பள்ளி கிராமம் சரவண நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இங்கு தேங்கி உள்ள மழை நீரை வாய்க்கால் வழியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், நரிப்பள்ளி, தர்மபுரி.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலை பகுதியில் நிலவாரப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஜெயசிங், நிலவாரப்பட்டி, சேலம்.
டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மல்லூர் எண்-3 கொமாராபாளையம் வழியாக வெண்ணந்தூருக்கு 2 அரசு டவுன் பஸ்கள் வந்து சென்றன. கொரோனா காரணமாக அந்த டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வெண்ணந்தூர் பொதுமக்கள் மல்லூர் வழியாக சேலம் செல்ல பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தற்போது கொரோனா குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வெண்ணந்தூர், நாமக்கல்.
சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீரும், சாக்கடை நீரும் அந்த பகுதியில் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதி அமைப்பதுடன் சாலையை சீரமைக்க நடவடிகை்க எடுக்க வேண்டும்..
-விக்னேஷ், வேப்பனப்பள்ளி.
Related Tags :
Next Story