4 வழிச்சாலை பணிக்கு மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்
கடலூர் அருகே 4 வழிச்சாலைக்காக சாலையோர மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர்,
விழுப்புரம்- புதுச்சேரி- கடலூர்- நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 194 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைகள் ரூ.6 ஆயிரத்து 431 கோடி செலவில் விரிவுப் படுத்தப்படுகிறது. இந்த சாலையை 4 தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகிறது.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலைக்காக 45 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள், பூச்செடிகள் வைத்து பராமரிக்கப்பட இருக்கிறது.
மரங்கள் வெட்டும் பணி தீவிரம்
இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் தொடங்கும் இந்த சாலை புதுச்சேரி, கடலூர் வழியாக சென்று நாகையில் முடிவடைகிறது.
கடலூரில் நகர பகுதிக்குள் வராமல் ஊராட்சி பகுதிகள் வழியாக செல்கிறது. விழுப்புரம்- புதுச்சேரி, கடலூர்- சிதம்பரம், சிதம்பரம் -சட்டநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல், மரங்கள் வெட்டிய இடங்களில் அளவீடு செய்து நிலத்தை சமப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. அதன்படி கடலூர்- சிதம்பரம் பகுதியில் பெரியப்பட்டு, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் சாலையோர மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பனை மரங்கள்
கடந்த சில நாட்களாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள புளிய மரம், வேப்ப மரம், தென்னை மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் உள்ள ஒரு பனை மரங்களும் வெட்டப்பட்டு உள்ளன.
பனை மரங்களை வருவாய்த்துறையினர் அனுமதி இன்றி வெட்டக்கூடாது என்று அரசு உத்தர விட்டுள்ளது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் உள்ள பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலையோரம் உள்ள பனை மரங்கள் வெட்டப்படவில்லை. வெட்டிய மரங்களை நேற்று லாரிகள் மூலம் ஊழியர்கள் ஏற்றி கொண்டு சென்றனர்.
ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணியும் நடந்தது. இந்த 4 வழிச்சாலையை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story