இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் அமைப்புக்கு தடை நீட்டிப்பு
ஜாகீர் நாயக்கின் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ஜாகீர் நாயக்கின் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை நீட்டிப்பு
இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் கடந்த 2016-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றார். இவர் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் அவருக்கு சொந்தமான ஐ.ஆர்.எப். அமைப்புக்கு (இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ், மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. டாக்கா குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட ஒருவரும், ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேராளவை சேர்ந்த 2 பேரும் ஜாகீர்நாயக்கின் பேச்சால் தூண்டப்பட்டதாக கூறியிருந்தனர்.
தற்போது மலேசியாவில் உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கின் ஐ.ஆர்.எப்-க்கு விதிக்கப்பட்ட தடையை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தீய எண்ணங்கள்
இந்த அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசால் முதன்முதலில் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்களில் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஈடுபட்டு வருவதாகவும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள், குறிப்பாக நிறுவனர் மற்றும் தலைவர் ஜாகீர் அப்துல் கரீம் நாயக் என்ற ஜாகீர் நாயக், மதம், நல்லிணக்கமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் மனதில் தீய எண்ணங்களை விதைக்கிறார் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
Related Tags :
Next Story