பெண்ணிடம் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அன்னவாசல்
விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் கென்னடி. இவரது மனைவி கலைமதி (வயது 48). இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி விராலிமலை சந்தைப்பேட்டை அருகே உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றபோது திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 43), கரூர் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தமிழரசன் மகன் நந்தகுமார் என்கிற நந்து (44) ஆகிய இருவரும் வழிமறித்து அவர் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி, நந்துகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு இலுப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இலுப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் குற்றவாளிகளான வேலுச்சாமி, நந்தகுமார் இருவருக்கும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றொரு வழக்கிலும் தீர்ப்பு
இதேபோல, திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் கார்த்திகேயன் (23). இவர் மீது அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த 2 வழக்குகளிலும் கார்த்திகேயனுக்கு 80 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பிச்சைராஜன் தீர்ப்பளித்தார். மேற்கண்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.
Related Tags :
Next Story