உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி தோகைமலை-திருச்சி சாலையில் கல்லூரி மாணவிகள் மறியல்
உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி தோகைமலை- திருச்சி சாலையில் கல்லூரி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை,
தடுப்பணை நிறைந்தது
தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதே பகுதியில் அழகானம்பட்டி, அண்ணாநகர், ரெங்கநாதபுரம் ஆகிய சிற்றூர்கள் உள்ளன. இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ரெங்கநாதபுரம் அருகே ஆற்று வாரியை கடந்து கல்லூரி மற்றும் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றுவாரின் குறுக்கே 5 அடி உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தடுப்பணை நிறைந்து தண்ணீர் செல்கிறது.
சாலை மறியல்
இதனால் அழகனாம்பட்டி வழியாக பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சுமார் 7 கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெங்கநாதபுரம் அருகில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் தோகைமலை- திருச்சி மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், தாசில்தார் விஜயா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story