கொட்டும் மழையில் தகரத்தை பிடித்தபடி பிணத்தை எரித்த அவலம்
கொட்டும் மழையில் தகரத்தை பிடித்தபடி பிணத்தை எரித்த அவலம் நீடிக்கிறது
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதி கிராமத்தில் உள்ள ஆத்திராவிடர் தெருவில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்களுக்கு ராங்கியன் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. இதனால், அருகே உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளக்கரையை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூகத்தினருக்கு தனித்தனியே மயான கொட்டகை உள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயான கொட்டகை இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை வெட்டவெளியில் தகனம் செய்யும் அவலம் நீடித்து வருகிறது. மேலும், இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கிச் செல்லும் நிலைதான் உள்ளது. குறிப்பாக மழைகாலங்களில் இறந்தவர் உடலை எரிக்க முடியாமல் பெரும் சிரமபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அந்த தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை வழக்கம்போல வயல்வெளி வழியாக எடுத்துச் சென்று கொட்டும் மழையில் தகரத்தை பிடித்தபிடி தகனம் செய்தனர். இதுகுறித்து ராங்கியன் விடுதி ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் இளைஞர் அமைப்பினர் கூறுகையில், எங்கள் ஊரில் உள்ள பள்ளிகூடம், அங்கன்வாடி கட்டிடம், சுகாதார வளாகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்றவற்றிக்கு தனிநபர்களின் இடங்களை அரசுக்கு ஒதுக்கி கொடுத்து உள்ளோம். ஆனால் எங்களுக்கு சொந்த ஊராட்சியில் மயான இடம் இல்லாதது வேதனையாக உள்ளது. மழை காலங்களில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய இருப்பவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. எனவே, ஆதிதிராவிடர் மக்களுக்கு ராங்கியன் விடுதி கிராமத்திலேயே மயான இடம் ஒதுக்கி கொட்டகை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story