கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர்-நண்பருக்கு அரிவாள் வெட்டு 8 பேருக்கு வலைவீச்சு


கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபர்-நண்பருக்கு அரிவாள் வெட்டு 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Nov 2021 12:29 AM IST (Updated: 17 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபரையும், அவருடைய நண்பரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் பட்டதாரி வாலிபரையும், அவருடைய நண்பரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

அரிவாள் வெட்டு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாவீர் நகரை சேர்ந்த செந்தில் மகன் யோகேஸ்வரன் (வயது25). பி.காம். பட்டதாரி. இவரும் இவரது நண்பர் டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (22) என்பவரும் நேற்று இரவு வெளியில் சென்றுவிட்டு மகாவீர் நகரிலுள்ள யோகேஸ்வரன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 8 பேரை கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் யோகேஸ்வரனை அரிவாளால் தலை, கை, முதுகு இடுப்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. 

8 பேருக்கு வலைவீச்சு

இதை தடுக்க வந்த நந்தகுமாருக்கும் சில இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர். பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த யோகேஸ்வரன், நந்தகுமார் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் யோகேஸ்வரன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
நந்தகுமார் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story