100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 17 Nov 2021 12:37 AM IST (Updated: 17 Nov 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

அரிமளம்
புதுக்கோட்டை மற்றும் மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்தநிலையில் அரிமளம் ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் பெருங்குடி கண்மாய் உள்ளது. இதன்மூலம் பெருங்குடி, வடக்குப்பட்டி, கூத்தம்பட்டி, சேப்பிளான்பட்டி, பாப்பம்பட்டி, விலாங்காட்டான்பட்டி, ஓட்டுப்பாலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பெருங்குடி கண்மாய் கலிங்கி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தேங்கிய கண்மாய் நீர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் புகுந்து நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.
 இதனால் சுமார் 70 முதல் 100 ஏக்கர் வரை விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து நடவு செய்து இருந்தனர். நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியதால் பயிர்கள் வளர்ந்து இருந்தன. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வரத்து வாரிகளை சீரமைக்க வேண்டும்
ஆகவே, பெருங்குடி கண்மாய் கலிங்கி மற்றும் வரத்து வாரிகளை சீரமைத்து நீர் செல்லும் வழித்தடங்களின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் குளத்தில் மீன்களை குத்தகைக்கு விடும் பணியை மட்டுமே செய்கின்றனர். ஆனால் குளத்தின் மடை, வரத்து வாய்க்கால் கலிங்கி ஆகியவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேடு பகுதி பாணிக்காடு கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டதை ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள்அயோத்திராஜா பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பொன்-புதுப்பட்டியில் நாகப்ப செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே மலையான் ஊரணி உள்ளது. மழையின் காரணமாக ஊரணியின் சுற்று சுவரின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. அதன் வழியாக பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களமிறங்கிய இளைஞர்கள்
 மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் நிரம்பினாலும் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை.  வரத்து வாரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
 கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனாலும் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிக் கொடுக்காததால் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிறையவில்லை. இந்த நிலையில் தான் கொத்தமங்கலம் அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் அன்னதானக்காவிரி கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


Next Story