‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Nov 2021 12:51 AM IST (Updated: 17 Nov 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நூலகத்தை விரிவு படுத்த கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள நூலகத்தில் நாள்தோறும் ஏராளமானோர் சென்று புத்தகத்தை படித்து வருகிறார்கள். ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லாததால் புத்தகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நூலகத்தில் ஆய்வு செய்து நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும். மேலும் நூலக வளாகத்தில் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே இதனை சீரமைத்து தரவேண்டும்.
வள்ளி, பெரம்பலூர்.
குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள  அடுக்குமாடி  குடியிருப்புகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் வைத்திருக்கும் உணவு பொருட்களை தூக்கி செல்வதுடன், செல்போன் உள்ளிட்டவைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் முதியோர் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகராஜன், எடமலைப்பட்டி புதூர், திருச்சி.
பழுதடைந்த மின்கம்பம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, மணமேடு, வார்டு எண் 1-ல் மாந்தோப்பு தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. மேலும், அதன் கான்கிரீட் உதிர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன், மணமேடு, திருச்சி.
போக்குவரத்து நெரிசல்
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் வெளியே சென்றுவிடுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும், பஸ் ஏற வரும் பயணிகளும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே  இப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நிறுத்துவதுடன், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூவலிங்கம், ஜே.கே. நகர், திருச்சி.
அரசு பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு இயக்கி வந்த அரசு டவுன் பஸ் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து  மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்ததின் பேரில் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது கடந்த 20 நாட்களாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பகுதியில் வழக்கம்போல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காசிராஜன், புதுக்கோட்டை.
இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து செட்டியாபட்டிக்கு செல்லும் அரசு பஸ் தடம் எண் 12 முள்ளூர் கிராமத்துக்கு மாலை 5.30 மணிக்கு வந்து சென்றது. தற்போது இந்த பஸ் இந்த பகுதிக்கு வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட அரசு பஸ்சை மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார், புதுக்கோட்டை.
பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்
திருச்சிமாவட்டம் துறையூர் தாலுகா கொல்லப்பட்டி ஊராட்சி கொத்தம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அங்கன்வாடி மேல்தளம் பழுதடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, கொத்தம்பட்டி, திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை நகரில் உள்ள திருவள்ளுவர் நகர், சிராஜ் நகர் சந்திப்பு அருகே சாலையோரம் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், குப்பை தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபா, புதுக்கோட்டை.

Next Story