போலீஸ் ஏட்டுகள் 2 பேருக்கு வெட்டு
கொடைக்கானலில் போலீஸ் ஏட்டுகள் 2 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது.
கொடைக்கானல்:
போலீஸ் ஏட்டுகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 பெண் போலீசார், நேற்று மாலை மூஞ்சிக்கல் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த சையது இப்ராகீம் என்பவர் போக்குவரத்து விதியை மீறி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட பெண் போலீசாரை அவர் திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மகளிர் போலீசார், கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, போலீஸ் ஏட்டுகள் சின்னச்சாமி, உதயசெல்வ குமார், சீனிவாசன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
பின்னர் தனது வீட்டில் பதுங்கி இருந்த சையது இப்ராகீமை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது தான் வைத்திருந்த பட்டா கத்தியால் போலீஸ் ஏட்டு சின்னசாமியின் கழுத்தில் வெட்டினார். இதனை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டு சீனிவாசனையும் கத்தியால் வெட்டி விட்டு அவர் தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த 2 பேருக்கும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே சையது இப்ராகீமை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் காமக்காபட்டி சோதனைச்சாவடியில் ஒரு காரில் தனது மனைவியுடன் சையது இப்ராகீம் வந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாருடன் அவர் தகராறில் ஈடுபட்டார். இந்தநிலையில் பொதுமக்கள் உதவியுடன் சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் சையது இப்ராகீமை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனைச்சாவடிக்கு விரைந்தனர். பிடிபட்ட சையது இப்ராகீமிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
மேலும் சோதனைச்சாவடியில் பணிபுரிந்த போலீசாருக்கு அவர் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற போலீஸ் ஏட்டுகள் 2 பேரை சந்தித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உடல் நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story