அரசு ஊழியர் வீட்டில் 11 மணி நேரம் சி.பி.ஐ. சோதனை


அரசு ஊழியர் வீட்டில் 11 மணி நேரம் சி.பி.ஐ. சோதனை
x
தினத்தந்தி 17 Nov 2021 12:57 AM IST (Updated: 17 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் அரசு ஊழியர் வீட்டில் 11 மணி நேரம் சி.பி.ஐ. சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவரின் செல்போன், மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.

வேடசந்தூர்:

சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச். காலனியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், தனது மனைவி, கல்லூரி மாணவரான மகனுடன்  நேற்று காலை வீட்டில் இருந்தார்.

அப்போது காலை 9 மணி அளவில், அரசு ஊழியரின் வீட்டு முன் 2 கார்கள் வந்து நின்றன. அதில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் வந்து இறங்கினர். பின்னர் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள், உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டுக்குள் இருந்து யாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே விடவில்லை. இதேபோல் வீட்டுக்குள் யாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

 செல்போன், மடிக்கணினி

வீட்டில் இருந்த அரசு ஊழியர், அவருடைய மனைவி, மகனிடம் துருவி துருவி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணை பற்றிய தகவல்களை, வாக்குமூலமாக பதிவு செய்து 3 பேரிடமும் கையெழுத்து பெற்றனர். 

மேலும் வீட்டில் கல்லூரி மாணவர் பயன்படுத்திய செல்போன், மடிக்  கணினி, மெமரி கார்டு உள்ளிட்ட பொருட்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் பிரிவைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

செக்ஸ் கேம்கள்

12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய கேம்களை அனுப்பி விளையாட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 14 மாநிலங்களில் 83 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதில் அரசு ஊழியரின் மகனான கல்லூரி மாணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை மற்றும் சோதனை இரவு 8 மணி வரையிலான 11 மணி நேரம் நடைபெற்றது. 

ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.  அரசு ஊழியர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story