இடிபாடுகளில் புதைந்த 2 உடல்கள் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு


இடிபாடுகளில் புதைந்த 2 உடல்கள் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 1:03 AM IST (Updated: 17 Nov 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. கடும் போராட்டத்துக்கு பின்பு 2 உடல்கள் மீட்கப்பட்டன.

சிவகாசி, 
சிவகாசியில் வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. கடும் போராட்டத்துக்கு பின்பு 2 உடல்கள் மீட்கப்பட்டன.
வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீடு தரைக்கு கீழே ஒரு தளமும், தரைக்கு மேலே 2 மாடிகளுடன் கூடியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டது.  சிவகாசி தீயணைப்பு வீரர்கள், 5 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். 
அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில், வெடிவிபத்து நடந்த வீட்டில் மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், கட்டிடத்தின் ஒரு பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் காகிதகுழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், மற்றொரு பகுதியில் பேன்சி பட்டாசுகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததாகவும், இதில் ஏற்பட்ட விபத்தில் வெடிகள் வெடித்து சிதறி கட்டிடம் தரைமட்டமானதும் தெரியவந்தது. 
இந்த விபத்தில் காகித குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27) ஆகியோர் காயத்துடன் உயிர்தப்பினர். இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண்கள் மாயம்
இவர்களுடன் பணியாற்றி வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோரை காணவில்லை.
இதை தொடர்ந்து ராட்சத எந்திரங்களை கொண்டு வந்து இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காலை 10 மணிக்கு மீண்டும் 3 எந்திரங்களை கொண்டு வந்து இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்தது. மதியம் வரை 20 சதவீத இடிபாடுகளை மட்டுமே அகற்ற முடிந்தது.  கட்டிடத்தின் மேல்தளங்கள் முழுவதுமாக அப்படியே விழுந்து கிடந்ததால், அவற்றை இழுக்கவோ, உடைக்கவோ முடியாமல் மண் அள்ளும் எந்திரங்கள் திணறின. இதனால் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
மாயமான கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோரின் உறவினர்கள் நேற்று அங்கு வந்து கதறி அழுதபடி பரிதவிப்போடு காத்திருந்தனர்.
மீட்பு பணிகளை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணி, சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தனி தாசில்தார் சிவஜோதி, தீயணைப்புத்துறை மாவட்ட அதிகாரி கணேசன் ஆகியோர் முடுக்கி விட்டனர்.
2 உடல்கள் மீட்பு 
26 மணி நேர போராட்டத்திற்கு பின்பு நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில், இடிபாடுகளில் புதைந்திருந்த மற்றொரு உடலும் மீட்கப்பட்டது. 2 உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி இருந்தன. 2 உடல்களையும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிவகாசி உதவி கலெக்டர் பிரிதிவிராஜ் கூறும்போது, “சட்டவிரோதமாக பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடி விபத்தில் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாததால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story