கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது


கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 1:26 AM IST (Updated: 17 Nov 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு: கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி மாணவி புகார்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்தவர் மஞ்சுளா( வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சுள்ளியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுளா, சுள்ளியா போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், தனக்கு(மஞ்சுளா) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த தஸ்லீம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தினமும் பேசி வந்தோம். 

இந்த நிலையில் என்னை சந்திக்க விரும்புவதாக தஸ்லீம் கூறினார். இதனால் நாங்கள் சந்திக்க முடிவு செய்தோம்.

பலாத்காரம் செய்ய முயற்சி

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு சுள்ளியாவில் ஒருபகுதியில் நேரில் சந்தித்து பேசினோம். பிறகு தஸ்லீம் என்னை மோட்டார் சைக்கிளில் மடிகேரிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு பூங்காவில் வைத்து நாங்கள் பேசி கொண்டிருந்தோம். அப்போது தஸ்லீம், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். 

அப்போது தஸ்லீம், 2 பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அவரிடம் இருந்து தப்பித்து சென்றுவிட்டேன். அதனால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

கைது

இந்த புகாரின் அடிப்படையில் சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து மடிகேரியை சேர்ந்த தஸ்லீமை கைது செய்தனர். மேலும் அவர் மடிகேரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. கைதான தஸ்லீமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story