12 பேருடன் சென்ற கார் மழை வெள்ளத்தில் மூழ்கியது
நித்திரவிளை அருகே நள்ளிரவில் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் கார் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 12 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே நள்ளிரவில் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் கார் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 12 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சாலையில் வெள்ளம்
குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். இவருடைய மகன் சுஜின் (வயது 25). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
அவரை வழியனுப்ப குடும்பத்தினரும் காரில் புறப்பட்டனர். ஏற்கனவே தொடர் மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் சுஜின், வெள்ளம் சூழாத பகுதியான மார்த்தாண்டம்-களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு அவரை குடும்பத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
கார் மூழ்கியது
பின்னர் அவர்கள் மேற்கு கடற்கரை வழியாக காரில் ஊருக்கு புறப்பட்டனர். நித்திரவிளை அருகே நடுவரம்பன்கரை பகுதியில் வந்த போது அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது.
குறைந்த அளவு தான் வெள்ளம் செல்கிறது என நினைத்த டிரைவர், அந்த சாலை வழியாக காரை இயக்கி உள்ளார். ஆனால் அந்த கார் பழுதாகி மூழ்கியது.
இதனால் காருக்குள் இருந்த சிறுவர், சிறுமிகள் என 12 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சாலையில் ஓடிய வெள்ளத்தில் கார் நிற்பதை பார்த்து உடனடியாக கொல்லங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
12 பேர் உயிர் தப்பினர்
இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கியதில் சிறுவர், சிறுமிகளும் இருந்ததால் பெரியவர்கள் அவர்களை காருக்குள் ேமலே ஏற்றியதாக தெரிகிறது. மற்றவர்கள் காரை பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் தத்தளித்தபடி இருந்துள்ளனர்.அந்த சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் விரைந்து வந்தனர். பின்னர் வெள்ளத்தில் சிக்கி தவித்த 12 பேரையும் மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காரையும் மீட்டனர்.
சாலையில் ஓடிய வெள்ளத்தில் கார் சிக்கி மூழ்கியதில் 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story