பெண் மர்ம சாவு; உறவினர்கள் போராட்டம்
பெண் மர்ம முறையில் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
பெண் மர்ம சாவு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ராஜதுரை(வயது 30). இவருக்கும், நாகல்குழி கிராமத்தை சேர்ந்த தனவேலின் மகள் சூர்யாவுக்கும்(26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜதுரையின் குடும்பத்தினருக்கும், சூர்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற சூர்யாவை, ராஜதுரை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா நேற்று மர்மமான முறையில் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சூர்யாவின் உறவினர்கள் ஏராளமானவர்கள் திரண்டு, சூர்யாவின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, வசந்த் உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
விசாரணை
இதையடுத்து சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜதுரை மற்றும் அவரது பெற்றோர் ராமச்சந்திரன், சீதை ஆகியோரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சூர்யாவின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி மூன்று வருடங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story