மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
குமாரபுரம் அருகே உள்ள முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறியதால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்மநாபபுரம்,
குமாரபுரம் அருகே உள்ள முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறியதால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகாமில் தங்கிய மக்கள்
குமரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குமாரபுரம் அருகே முட்டைக்காடு காலனியில் வெள்ளம் புகுந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மக்களை அதிகாரிகள் மீட்டு முட்டைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். இந்தநிலையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து வெள்ளம் கொஞ்சம், கொஞ்சமாக வடிய தொடங்கியது. ஆனால் முழுமையாக வெள்ளம் வடியவில்லை என கூறப்படுகிறது.
திடீர் போராட்டம்
இதற்கிடையே முகாமில் தங்கியிருந்தவர்களை அதிகாரிகள் வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் முகாம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வீடுகளில் இருந்து தண்ணீர் இன்னும் வடியவில்லை. அதற்குள் முகாமில் இருந்து வெளியேறுமாறு கூறினால், நாங்கள் எங்கு செல்வது என தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தினர்.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வெள்ளம் வடிந்த பிறகு வீட்டுக்கு செல்லலாம், அதுவரை முகாமில் தங்கியிருக்கலாம் என கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் முகாமிற்கு சென்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story