மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி; பொதுமக்கள் சாலை மறியல்


மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2021 1:56 AM IST (Updated: 17 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

மொபட் மீது கார் மோதி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

தொழிலாளி சாவு
பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று வல்லாபுரம் கிராமத்தில் இருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது மொபட்டில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
பெரம்பலூர் இந்திரா நகர் தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், எதிர்பாராத விதமாக சீனிவாசனின் மொபட் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் மொபட் சிக்கியது. மேலும் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இது பற்றி தகவல் அறிந்த சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை கண்டித்தும், வேகத்தடுப்புகள் அமைக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.
மேலும் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து சீனிவாசனின் மகன் கார்த்திகேயன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பிச்சென்ற கார் டிரைவர் பெரம்பலூரை அடுத்துள்ள கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத்தை(21) தேடி வருகின்றனர்.

Next Story