2 தொழில் அதிபர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி; பெண் மீது வழக்குப்பதிவு


2 தொழில் அதிபர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி; பெண் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2021 2:06 AM IST (Updated: 17 Nov 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவை சேர்ந்த 2 தொழில் அதிபர்களிடம் ரூ.19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த 2 தொழில் அதிபர்களிடம் ரூ.19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொழில் அதிபருடன் பழக்கம்

ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொழில் அதிபருக்கு கமலா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டானது. அந்த தொழில் அதிபரிடம் கமலா எனது தந்தை ஊட்டியில் டீ எஸ்டேட் வைத்து உள்ளார் என்று கூறியுள்ளார். அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் எனக்கு சொந்தமான கருப்பு பணம் கேரளாவில் சிக்கி உள்ளது. அந்த பணத்தை விடுவிக்க அங்கு உள்ள அதிகாரிகள் ரூ.7 லட்சம் கேட்கிறார்கள். இதனால் நீங்கள் எனக்கு ரூ.7 லட்சம் தந்து உதவி செய்யுங்கள் என்று கமலா தொழில் அதிபரிடம் கேட்டு உள்ளார். இதனால் தொழில் அதிபர் ரூ.7 லட்சம் கொடுத்து உள்ளார்.

வழக்குப்பதிவு

பின்னர் வீட்டில் உள்அலங்காரம் செய்ய வேண்டும் என்றும், வேறு வீட்டிற்கு செல்ல முன்பணம் கொடுக்க வேண்டும் என்றும் தொழில் அதிபரிடம் கமலா ரூ.6 லட்சம் வரை வாங்கி உள்ளார். இதையடுத்து அவர் தொழில் அதிபருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். மேலும் தொழில் அதிபரின் செல்போன் எண்ணை, கமலா பிளாக் செய்து விட்டதாக தெரிகிறது.

இதுபோல் சம்பிகேஹள்ளியில் வசிக்கும் இன்னொரு தொழில் அதிபரிடமும் திருமண தகவல் இணையதளம் மூலம் பழகிய கமலா அவரிடமும் பல காரணங்களை கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கிவிட்டு அவருடன் பேசுவதை தவிர்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் அந்த 2 தொழில் அதிபர்களும் தங்களிடம் ரூ.19 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரின்பேரில் கமலா மீது சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story