சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
சுரண்டை:
ெதன்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீராணம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் அழகேசன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கேரளாவில் கூலி வேலை செய்து வந்த இவர், தலைத்தீபாவளிக்காக ஊருக்கு வந்தார். இதன்பின்னர் புதுமாப்பிள்ளை அழகேசன் தனது மனைவி மகேஸ்வரியின் சொந்த ஊரான சேர்ந்தமரம் அருகே உள்ள சுந்தரேசபுரத்திற்கு சென்று தலைத்தீபாவளி கொண்டாடி விட்டு மீண்டும் வீராணத்திற்கு வந்தார்.
நேற்று காலையில் வீராணம் தெற்கு வயக்காட்டில் நெல் நாற்று நடும் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது நெல் நாற்றை சுமந்து கொண்டு வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென நிலைதடுமாறி வாய்க்கால் ஓரமாக நிற்கும் மின்கம்பத்தை பிடித்து விட்டார். இதில் அவரது உடலில் திடீரென மின்சாரம் தாக்கி வயலில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உறவினர்கள் வீரகேரளம்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அழகேசன் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் திருமணமான 6 மாதங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அழகேசன் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்கள் வீராணத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் தாசில்தார் பட்டுமுத்து, சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஷேக்மைதீன், வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அழகேசன் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தரவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story