3-வது நாளாக 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து நேற்று 3-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து நேற்று 3-வது நாளாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
உபரி நீர் வெளியேற்றம்
தமிழக, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்த உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் 16 கண் மதகுகள் வழியாகவும், வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் சுரங்க நீர்மின் நிலையங்கள் வழியாகவும் திறந்து விடப்படுகிறது. மேலும் நேற்று அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மேட்டூர் அணைக்கு வந்தார். அவர் 16 கண் பாலத்தின் மீது இருந்து மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் மலர் தூவினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன், அணையின் இடதுகரை, வலது கரை உள்பட பல்ேவறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றும் நீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டத்துக்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு சென்றார். அங்கு உபரிநீர் திட்டத்துக்குட்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணிக்காக மோட்டாரை இயக்கும் பொத்தானை அழுத்தி தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து உபரி நீர் திட்டத்தின் முதல் ஏரி உள்ள இடமான எம்.காளிப்பட்டிக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன், அங்கு ஏரியில் மலர் தூவினார்.
வரவேற்பு
இந்த நிகழ்ச்சிகளில் எம்.பி.க்கள் செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், ஜி.கே.மணி, சதாசிவம், அருள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தி.மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மேட்டூர் நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியம், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மேட்டூர் வந்த அமைச்சர் துரைமுருகனை முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், நங்கவள்ளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், மேட்டூர் நகர செயலாளர் காசி விஸ்வநாதன், நங்கவள்ளி ஒன்றிய 10-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்காக திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் தி.மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி உள்பட பலர் உள்ளனர்.
Related Tags :
Next Story