காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு ஒகேனக்கல்லில் அமைச்சர் துரைமுருகன் தகவல்
மழைக்காலங்களில் அதிகமாக செல்லும் காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக துறை அதிகாரிகளை கொண்டு விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தர்மபுரி:
மழைக்காலங்களில் அதிகமாக செல்லும் காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக துறை அதிகாரிகளை கொண்டு விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ராசி மணலில் அணை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒகேனக்கல் நீரேற்று நிலையம் அருகில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை அவர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் திவ்யதர்சினி, செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் முடிவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல், மேகதாது உள்ளிட்ட அணைகள் கட்டுவது குறித்து நீண்ட நாட்களாகவே மாநிலங்களுக்கிடையே சில பிரச்சினைகள் இருந்து வருகின்றது. இந்த அணைகள் கட்டுவதில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்த பின்பு, ராசிமணலில் அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், அணை கட்டுவோம் என கர்நாடக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்திற்கு செல்லும் எல்லோரும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் வரும் என்று சொல்வார்கள். நாங்களும் சொல்கிறோம் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் வரும்.
விரிவான ஆய்வு
காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பினால், விவசாயம் செழிக்கும், வாழ்வாதாரம் உயரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நான் தற்போது ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு செய்துள்ளேன். இதில் மழைக் காலங்களில் அதிகமாக செல்லும் உபரிநீரை பென்னாகரம் அருகே உள்ள கண்டேயன்குட்டை ஏரியில், நிரப்பி அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும் என்று எனக்குள் எண்ணம் வந்திருக்கிறது. இதுகுறித்து துறை அதிகாரிகளை கொண்டு ஒரு விரிவான ஆய்வு நடத்தி பிறகு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செங்குட்டுவன், செயற்பொறியாளர் சங்கரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் குமார், கனிம வளங்கள் துணை இயக்குனர் விஜயலட்சுமி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story