வாடிக்கையாளர் போல் நடித்து காசோலையில் போலி கையெழுத்து போட்டு வங்கியில் மோசடி; 2 பேர் கைது
வாடிக்கையாளர் போல் நடித்து காசோலையில் போலி கையெழுத்து போட்டு வங்கியில் மோசடியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கிக்கு வந்த நபர் ஒருவர் வாடிக்கையாளரின் பெயரில் காசோலையை வாங்கி அவரை போன்று போலியாக கையெழுத்திட்டு பணத்தை பெற முயற்சி செய்தார். இதைக்கண்ட வங்கி மேலாளர் அந்த நபரை மடக்கி பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசோக் நகரை சேர்ந்த விஜய் வர்மா (26), என்பதும், இச்செயலுக்கு மூளையாக செயல்பட்டது மதுரவாயலை சேர்ந்த பரத் (33) எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணாநகர் போலீசார் பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் கிளைகளில் வேலை செய்து வந்த பரத் கடந்த மாதம் வேலையை விட்டு நின்ற நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொண்டு அவர்களை போல் காசோலையில் கையெழுத்து போட்டு பணம் பெற்று வந்ததாக தெரிவித்தார்.
கடந்த மாதம் கோயம்பேட்டில் உள்ள வங்கியில் போலியாக கையெழுத்து போட்டு ரூ.2 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்தது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story