‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழலைகள் பள்ளி அருகே குப்பைமேடு
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் (எம்.கே.பி.) 13-வது கிழக்கு தெருவில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அருகில் மின் மாற்றி உள்ளது. இந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இப்பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றுவதும் இல்லை. பள்ளிக்குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, குப்பைகளை அகற்றுவதுடன், இங்கு குப்பைகள் கொட்டாதவாறு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்.
கொப்பளிக்கும் கழிவுநீர்
சென்னை விருகம்பாக்கம் பம்மல் நகர் 2-வது தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கொப்பளித்து தெருவில் வழிந்தோடுகிறது. துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரவும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சசிகலா, பம்மல் நகர்.
கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை ஊராட்சி தியாகி சொக்கலிங்கநாதர் தெருவில் சாக்கடை திறந்தநிலையில் உள்ளது. தற்போது கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் தெருவில் ஏற்கனவே ஒரு குழந்தை டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்.
- வனிதா, நசரத்பேட்டை ஊராட்சி.
குண்டும், குழியுமான சாலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 14-வது வார்டு லால் பகதூர் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமம் அடைந்துள்ளனர். சாலை செப்பனிடப்படுமா?
- 14வது வார்டு மக்கள். கூடுவாஞ்சேரி.
கழிவுநீர் குளமான புளியந்தோப்பு
சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர் பகுதியில் கடந்த வாரம் தேங்கிய மழைநீரால் பரிதவித்தோம். தற்போது இப்பகுதி முழுவதும் கழிவுநீரால் சூழப்பட்டுள்ளது. திரும்பிய திசை எல்லாம் கழிவுநீராக காட்சி அளிக்கிறது. நிம்மதி இழந்து தவிக்கிறோம். சுகாதார துறையினர் எங்கள் பகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- கழிவுநீர் பிரச்சினையால் அவதியுறும் மக்கள்.
மினி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதிநகர் வரை குரோம்பேட்டையில் இருந்து எஸ் 10 மற்றும் எஸ் 3 ஆகிய 2 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவ- மாணவிகள் என அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்த சேவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் மீண்டும் மினி பஸ் இயக்கப்படுமா?
- பாபு, சித்தாலப்பாக்கம்.
கொசுக்கள் படையெடுப்பு
சென்னை டீச்சர்ஸ் காலனி லட்சுமிபுரத்தில் உள்ள மழைநீர் கால்வாய் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கொசுக்கள் படையெடுப்பும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த மழைநீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஞானமுருகன், டீச்சர்ஸ் காலனி.
நோய் பரப்பும் கழிவுநீர்
சென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் ஒரு வாரமாக பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியே துர்நாற்றம் பரவி கிடக்கிறது. நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே இந்த கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- விக்ரம், சூளைமேடு.
ஒழுகும் தபால் அலுவலகம்
சென்னை எழும்பூர் காளத்தியப்பா தெருவில் உள்ள தபால் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் வடிந்து அலுவலத்தில் கொட்டுகிறது. இதனால் தபால் அலுவலக ஊழியர்கள் குடைபிடித்து பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. மழை தண்ணீர் காரணமாக கம்ப்யூட்டர் போன்ற மின்னணு பொருட்களையும், மின் சாதனங்களையும் மிகவும் சிரமமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தபால் நிலைய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.சரவணகுமார், எழும்பூர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதி, மதுரை மணவாளன் நகர் 4-வது தெருவில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி கடும் இன்னலை சந்திக்கிறோம். இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் இதை அகற்றி கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுரை மணவாளன் நகர் மக்கள்.
மோசமாக இருக்கும் சாலை
பல்லாவரம் ரெயில்நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் சாலையை சீரமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் மழை காலங்களில் இந்த சாலை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்வதற்கே மிகவும் சிரமமாக இருக்கிறது. இதுகுறித்து பல்லாவரம் நகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
- பல்லாவரம் ரெயில் நிலைய பகுதி மக்கள்.
மரக்கிளை கழிவுகள் அகற்ற வேண்டும்
சென்னை எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு முன்பு மரக்கிளை கழிவுகள் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்வோரும், அந்த பகுதியாக கடந்து செல்பவர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும்.
- பகுதி மக்கள்.
மின்கம்பம் மாற்றப்படுமா?
சென்னை மதுரவாயல் ஏ.கே.ஆர்.நகர் வி.ஜி.என். அவன்யூ தெருவில் 2 மின்கம்பங்கள் மிக அபாயகரமான நிலையில் இருக்கின்றன. இந்த கம்பங்களில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிந்து கொண்டிருக்கின்றன. எனவே மின்வாரியம் உடனடி நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
- பொதுமக்கள், ஏ.கே.ஆர்.நகர்.
Related Tags :
Next Story