திருவள்ளூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 17 Nov 2021 3:09 PM IST (Updated: 17 Nov 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில் இருளர் இன மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளது. இதனை சீரமைக்க கோரி பலமுறை அவர்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது பெய்த கனமழை காரணமாக பலரது வீடு மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. தற்போது இவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட திரளான இருளர் இன மக்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story