புதுப்பாளையம் தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி சாவு
புதுப்பாளையம் தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் காரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 38) இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். முனிரத்தினம் பொன்னேரியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவியுடன் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் தனது சகோதரர் மற்றும் தாயை பார்க்க முனிரத்தினம் மட்டும் காரணி கிராமத்திற்கு சென்றார். இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையாலும், பிச்சாட்டூர் ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டதாலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து முனிரத்தினம் தனது தாயுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலைக்கு செல்ல முனிரத்தினம் காரணி கிராமத்தில் இருந்து புதுப்பாளையம் தரைப்பாலத்தில் ஆரணி ஆற்று வெள்ளத்தில் இறங்கி ஆரணி ஆற்றை கடக்க முயன்றார்.
அப்போது வெள்ளத்தின் வேகம் திடீரென அதிகரித்ததால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முனிரத்தினம் மூச்சுத்திணறி பலியானார். தகவலறிந்த ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முனிரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story