சேதமடைந்த கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்


சேதமடைந்த கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2021 3:14 PM IST (Updated: 17 Nov 2021 3:14 PM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1,983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது.

இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. 1984-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழைக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் பல இடங்களில் சேதம் அடைந்தது.

சேதம் அடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு கால்வாய் சீரமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோ மீட்டர் தூரம் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்தன.

இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கால்வாயில் தண்ணீர் புரண்டு ஓடியதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

Next Story