மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லோடுஆட்டோவில் ரூ.3 லட்சம் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்


மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லோடுஆட்டோவில்  ரூ.3 லட்சம் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 17 Nov 2021 3:59 PM IST (Updated: 17 Nov 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லோடுஆட்டோவில் ரூ3 லட்சம் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லோடு ஆட்டோவில்  கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.  அவரது உத்தரவின் பேரில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் எட்டயபுரம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.
ரூ.3 லட்சம் கஞ்சா கடத்தல்
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு ஆட்டோவை தனிப்படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 பண்டல்கள் கொண்ட 25 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாகனத்தை ஓட்டி வந்தது மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் அலெக்ஸ் பாண்டி (வயது 29) என்பதும், அவர் மேற்படி லோடு ஆட்டோவில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.
பறிமுதல்
அவரிடம் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவையும், கடத்துவதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவையும், சரக்கு வாகனத்தையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் கஞ்சா மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
172 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் 309 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 369 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 316 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேர் உள்பட மொத்தம் 172 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார

Next Story