கத்தாங்கண்ணி குளம் நிரம்பியது
காங்கேயம் சுற்றுப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கத்தாங்கண்ணி குளம் நிரம்பியது.
காங்கேயம், நவ.18-
காங்கேயம் சுற்றுப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கத்தாங்கண்ணி குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் கத்தாங்கண்ணி குளம் அமைந்துள்ளது. 108 ஏக்கர் பரப்பளவில் 16 அடிக்கு உயரத்துக்கு தண்ணீர் தேங்கும் வகையில், 62 ஏக்கர் நேரடி பாசன ஆயக்கட்டும், சுமார் 300 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெறும் வகையில் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் கடந்த 10 நாட்களாக மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 31 குளங்கள் அமைக்கபட்டுள்ளன. இதில் கத்தாங்கண்ணி குளம் இறுதி குளம் ஆகும்.
இந்திலையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் சென்றது. கத்தாங்கண்ணி குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வரத்து வாய்க்கால் கான்கிரீட் தளமாக அமைக்கும் சீரமைப்பு பணி முடிவடைய வில்லை எனக்கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை நீரை குளத்துக்கு திறக்காமல் இருந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீரைதிறக்க கோரி மனு அளித்தனர். இதனை அடுத்து கடந்த வாரம் முதல் கத்தாங்கண்ணி குளத்துக்கு நொய்யல் ஆற்று மழை நீர் திறந்து விடப்பட்டது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், கடந்த 20 ஆண்டுக்கு பின் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. மொத்தம் 16 அடி உயரம் கொண்ட குளத்தில் தண்ணிர் நிரம்பியதை அடுத்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தண்ணீரில் மலர் தூவி வணங்கினர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு கத்தாங்கண்ணி குளம் முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பி உள்ளதால், குளத்தை சுற்றியுள்ள 5 மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடி நீர்தட்டுப்பாடு நீங்கி, விவசாய கிணறுகளில் போதிய நீரும் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சாய நீரை மழை நீருடன் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுக்க தீவிர முயற்ச்சிகளை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story