திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
x
தினத்தந்தி 17 Nov 2021 6:44 PM IST (Updated: 17 Nov 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
பொதுமக்கள் சாலை மறியல்
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெரு, தெற்கு புதுத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்ட இணைப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறி தெருக்களில் குளம் போல் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகர பஞ்சாயத்து நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்த கழிவு நீர் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நாழிக்கிணறு பஸ்நிலையம் செல்லும் வழி - அமலிநகர் செல்லும் சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கனகாபாய், நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். புகார் செய்யும் நேரத்தில் மட்டும் நகரப்பஞ்சாயத்து அலுவலர்கள் வந்து பெயருக்கு சரி செய்து விட்டு செல்கின்றனர். அவர்கள் சென்ற பிறகு மீண்டும் கழிவு நீர் வெளியேறுகிறது. எனவே முறையான தீர்வுக்கு வழி செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்” என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதற்கு அதிகாரிகள், “வெகு விரைவில் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
திடீர் சாலை மறியலால் நாழிக்கிணறு பஸ்நிலையத்தில் இருந்து வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஆலோசனை கூட்டம்
இதனையடுத்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் (பொறுப்பு) பாபு முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2 நாட்களுக்குள் தற்காலிக தீர்வும், தொடர்ந்து நகர பஞ்சாயத்து செயற்பொறியாளர் மூலம் திட்ட மதிப்பீடு தயாரித்து நிரந்த தீர்வு எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story