129 அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 129 அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.
ஊட்டி
தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 129 அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.
அபாயகரமான மரங்கள்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் மண் ஈரப்பதமாக இருப்பதால் மரங்கள் சாய்ந்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் குன்னூர் அருகே ஜெகதளாவில் மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சாய்ந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற கணக்கெடுக்கும் பணி நடந்தது. மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களை ஒட்டி உள்ள அபாயகரமான மரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.
கலெக்டர் ஆய்வு
மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அபாயகரமான மரங்கள் உள்ளதா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் விழும் நிலையிலும், வேர்ப்பகுதி வெளியே தெரியும் நிலையிலும் உள்ள மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அகற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று அபாயகரமான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
வெட்டி அகற்றம்
அதன்படி ஊட்டி-கோத்தகிரி சாலை, குன்னூர்-கட்டபெட்டு சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலை, மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலை உள்ளிட்ட சாலைகளில் அபாயகரமான மரங்களை சாலை பணியாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். நீலகிரியில் கடந்த சில நாட்களில் 129 அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளது.
மேலும் மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள் மற்றும் மரங்களால் மழைக்காலங்களில் மின் தடை, மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மின் கம்பிகளை உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்களை சுற்றி ஆக்கிரமிப்பு செடிகள் அப்புறப்படுத்தப்படுகிறது.
Related Tags :
Next Story