குறைந்தபட்ச ஊதிய அரசாணையை உடனே வெளியிட வேண்டும்


குறைந்தபட்ச ஊதிய அரசாணையை உடனே வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

ஊட்டி

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

கால அவகாசம் முடிவு

தமிழகத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்கு இறுதி அரசாணையை வெளியிடக்கோரி தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் தனியார் தேயிலை தோட்டங்களிலும், சிறு, குறு விவசாயிகள் இடத்திலும், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திலும் (டேன்டீ) பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய திருத்த மாதிரி வரைவு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அனைவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த மாதிரி வரைவாணையின் கால அவகாசம் முடிவுற்ற போதிலும், இறுதி ஆணை அறிவிக்கப்படாமல் உள்ளது. 

ஏமாற்றம்

தமிழக அரசு மாதிரி வரைவாணையில் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். டேன்டீ தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டில் 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நிர்வாக வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் இருந்த தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் தோட்ட வேலைகள் செய்து தேயிலைத்தூள் உற்பத்தி செய்து கொடுத்தனர். அந்த சமயத்தில் பணி மறுக்கப்பட்ட நாட்களில், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் மருத்துவப்படி, விடுப்பு சம்பளம், குறைந்தபட்ச ஊதிய நிலுவை, பணிக்கொடை என சட்டப்படி வழங்கப்பட வேண்டிய தொகைகள் முழுமையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. 

குறைவான ஊதியம்

அதேபோல் தனியார் தேயிலை தோட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மனச்சோர்வுடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தி கடந்த ஜூலை 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்தும் படி ஆணை வெளியிட்டால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நீலகிரியில் இடைக்கால ஊதிய ஒப்பந்தம் என்ற போர்வையில் தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை காட்டிலும் குறைவான ஊதியத்திற்கு ஒப்பந்தம் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி விரைந்து அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story