முகத்தை தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொல்ல முயற்சி


முகத்தை தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 17 Nov 2021 7:52 PM IST (Updated: 17 Nov 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

சரவணம்பட்டியில் சொத்து பிரச்சினையில், முகத்தை தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொல்ல முயன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் சொத்து பிரச்சினையில், முகத்தை தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொல்ல முயன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவரை பிரிந்தார்

கோவை சரவணம்பட்டியை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி பாப்பாத்தி என்ற சின்ன ராமாத் தாள் (வயது75). கருப்பசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இவர்களுடைய மகள் ஜோதிமணி (45). இவருக்கு சிவக்குமார் என்பவ ருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை யில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிமணி கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.

நில ஆவணங்கள் மாயம்

பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. அது தொடர்பான பத்திரம் மற்றும் ஆவணங்களை ஜோதிமணி தனது  கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிகிறது. 

தனது சொத்து ஆவணங்கள் மாயமானது குறித்து பாப்பாத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து பத்திரங்களை ஜோதிமணி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் பாப்பாத்தி புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வந்தது.

தலையணையால் அமுக்கினார்

சம்பவத்தன்று இரவு வீட்டில் கட்டிலில் பாப்பாத்தி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது தாயார் மீது இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய ஜோதிமணி திட்டம் தீட்டினார். அதை உடனே செயல்படுத்தும் நோக்கில் பாப்பாத்தியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். 
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாப்பாத்தி கட்டில் கீழே இருந்த பொருட்களை கையால் தட்டி விட்டார். அந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஜோதிமணியின் குழந்தைகள் எழுந்து வந்து பார்த்தனர். 

காலில் பாறாங்கல்லை போட்டார்

அவர்கள், பாட்டியை தங்களின் தாய் ஜோதிமணி கொலை செய்ய முயன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், தங்க ளின் தாய் ஜோதிமணியை தடுத்து பாட்டி பாப்பாத்தியை காப்பாற்றி னர்.
ஆனாலும் ஆத்திரம் தீராத ஜோதிமணி வீட்டின் வெளியே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தனது தாயார் பாப்பாத்தி காலில் போட்டார். இதில் அவரது 2 கால்களும் உடைந்து ரத்தவெள்ளத்தில் பாப்பாத்தி கிடந்தார்.

கைது

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பாப்பாத்தியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 இதில் சொத்துக்காக பெற்ற தாயை மகளே கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிமணியை  போலீசார் கைது செய்தனர்.


Next Story