பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரூர் டாக்டர் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரூர் டாக்டர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 8:18 PM IST (Updated: 17 Nov 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கரூர் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
பாலியல் தொந்தரவு
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் ஜி.சி. எலும்பு மூட்டு மருத்துவமனை உள்ளது. இங்கு கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் கேசியராக பணியாற்றி வந்தார். இவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் 11-ம் வகுப்பு படிக்கும் எனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்த்த மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 
போக்சோவில் வழக்கு
விசாரணையில், டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனையின் மேலாளர் சரவணன் மூலம் அந்த பெண்ணின் மகளான 11-ம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து தனது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மருத்துவமனை மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
டாக்டர் கைது
மேலும் தலைமறைவாக இருந்த டாக்டர் ரஜினிகாந்தை பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்தவழியாக காரில் வந்த டாக்டர் ரஜினிகாந்தை போலீசார் கைது செய்து கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து டாக்டர் ரஜினிகாந்தை கரூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story